செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டையும், பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிகிடப்பதையும் படத்தில் காணலாம்.

பெண்ணாடம் அருகே ஆசிரியர் வீட்டில் வெள்ளிப்பொருட்கள்-கார் திருட்டு

Published On 2016-12-15 17:23 IST   |   Update On 2016-12-15 17:24:00 IST
பெண்ணாடம் அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள் மற்றும் கார் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள ராமநத்தம் ஹைவேசிட்டி நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45). இவர் பெண்ணாடம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயா. இவர் பெரம்பலூர் மாவட்டம் லெப்பை குடிகாடு பகுதியில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார்.

நேற்று காலை வழக்கம் போல் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தங்களது பணிகளுக்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டின் பூஜை அறையில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த 1 கிலோ வெள்ளி பொருட்களையும், ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் வீட்டிற்கு பின்னால் நிறுத்தி வைத்திருந்த காரையும் திருடிச் சென்றுவிட்டனர்.

மாலையில் வீடு திரும்பிய விஜயா வீட்டின் உள்ளே சென்றபோது பூஜை அறையில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன. பீரோவில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் பின்னால் நிறுத்தியிருந்த கார் திருட்டு போயிருந்தது அவருக்கு மேலும் அதிர்ச்சி அளித்தது.

இதுகுறித்து விஜயா தனது கணவர் அய்யப்பனுக்கு தகவல் தெரிவித்தார். அய்யப்பன் ராமநத்தம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.

மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த நிலையில் விஜயாவின் உறவினர்கள் திருட்டு போன காரை திட்டக்குடி அருகே பார்த்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News