கடலூரில் தொடர்ந்து கடல் சீற்றம்: தாழங்குடா பகுதியில் மண் அரிப்பு
கடலூர்:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான ‘வார்தா’ புயல் வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) ஆந்திர மாநிலம் நெல்லூர்- காக்கி நாடா இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் நேற்று முன்தினம் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடலூரில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
அலைகள் ஆக்ரோஷமாக கரையை வந்து மோதுகிறது. இதையடுத்து கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா மற்றும் கடற்கரையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
தாழங்குடா கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டதால், அங்கு நிறுத்தியிருந்த படகுகளை கடல் அலைகள் இழுத்துச்செல்லும் நிலை ஏற்பட்டது. இதை பார்த்த மீனவர்கள் உடனடியாக அந்த படகுகளை, மேடான பகுதிக்கு எடுத்துச்சென்றனர்.
இது குறித்து தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், “கடல் சீற்றம் ஏற்படும்போது மண் அரிப்பு ஏற்பட்டு, கடற்கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ள படகுகளை இழுத்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் அந்த படகுகள் சேதமடைகிறது.
இதனை தடுக்கவும், பாதுகாப்பாக படகுகளை நிறுத்தி வைக்கவும் மேடான இடத்தை தேர்வு செய்து ஒதுக்கி தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றனர்.
கடல் சீற்றம் காரணமாக 5-வது நாளாக கடலூரில் இன்று மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.