செய்திகள்

3 நாட்கள் தொடர் விடுமுறை: கடலூரில் வங்கி-ஏ.டி.எம்.களில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்

Published On 2016-12-09 23:19 IST   |   Update On 2016-12-09 23:19:00 IST
3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு கடலூரில் வங்கி-ஏ.டி.எம்.களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கடலூர்:

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந் தேதி அறிவித்தது.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் வரும் 30-ந் தேதி வரை டெபாசிட் செய்யலாம் எனஅறிவிக்கப்பட்டது.

ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்புக்குப் பின்னர் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்துக்கு வராததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கிகளிலும் சரி, ஏ.டி.எம்.களிலும் சரி பொதுமக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தையும் தேவையான அளவுக்கு எடுக்க முடியாமல தவித்து வருகின்றனர்.

பணத்தட்டுப்பாடு பிரச்சினை கடலூர் மாவட்ட மக்களையும் விட்டு வைக்கவில்லை. கடலூர் மாவட்டத்தில் 234 அரசுடைமை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படுகின்றன. 300-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.கள் உள்ளன.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்கள் முன்பு பொதுமக்கள் காத்துக்கிடப்பது வாடிக்கையாகி விட்டது. கடலூரில் வங்கிகள் திறக்கும் முன்பே பொதுமக்கள் காத்திருக்கும் அவலத்தை காணமுடிகிறது.

இந்த நிலையில் வங்கிகளுக்கு நாளை முதல் வரும் திங்கட்கிழமை (12-ந் தேதி) வரை 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளில் பணபரிவர்த்தனை செய்ய முடியாது. எனவே இன்று வங்கிகளில் வழக்கத்துக்கு அதிகமாக கூட்டம் காணப்பட்டது.

வங்கிகளில் குறைவான அளவே பொதுமக்களுக்கு பணம் கொடுத்தனர். இதனால் வங்கியை விட்டு வெளியே வரும் பொதுமக்கள், மீண்டும் வங்கிகள் இனி செவ்வாய்கிழமை தான் திறக்கும் என்பதால் குறைவான பணத்தை வைத்து கொண்டு எப்படி 3 நாட்கள் சமாளிப்பது என புலம்பியபடி சென்றதை காண முடிந்தது.

கடலூர் மாவட்டத்தில் இன்று பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்படாமல் மூடியே இருந்தன. கடலூரில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.களில் கடலூர் மஞ்சக்குப்பம்,திருப்பாதி ரிப்புலியூர், சிதம்பரம் ரோடு,திருவந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஒருசில ஏ.டி.எம். மையங்கள் மட்டுமே இன்று இயங்கின.

இதனால் பொது மக்களின் கூட்டம் ஏ.டி.எம். முன்பு அலைமோதியது. ஏ.டி.எம்.களில் விரைவிலேயே பணம் தீர்ந்து விடுவதால் வரிசையில் காத்திருப்பவர்கள் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

Similar News