செய்திகள்

ஜெயலலிதாவின் இறுதி சடங்கு முடிந்ததையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியது

Published On 2016-12-08 23:07 IST   |   Update On 2016-12-08 23:07:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியதையடுத்து. பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.
புதுக்கோட்டை:

ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி இரவு மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அன்று நள்ளிரவு முதல் புதுக்கோட்டை நகரில் அனைத்து பஸ்களும் ஓடவில்லை. ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள், ஜவுளிக்கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினமும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் ஜெயலலிதாவின் இறுதி சடங்கு முடிந்ததையடுத்து நேற்று அதிகாலை முதல் புதுக்கோட்டை நகரில் பஸ்கள் படிப்படியாக ஓட தொடங்கியது. காலையில் கடைகள் அனைத்து திறக்கப்பட்டது. காய்கறி மார்க்கெட்டும் வழக்கம் போல் இயங்கியது.

புதுக்கோட்டையின் முக்கிய கடை வீதி பகுதிகளான கீழ ராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதியில் கடைகள் திறக்கப்பட்டது. மேலும் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களும் இயங்கின. பள்ளி கல்லூரிகள் மட்டும் விடுமுறை என்பதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியரின் பரபரப்பு இன்றி காணப்பட்டது. ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் கூட்டம் வழக்கம் போல் காணப்பட்டது.

அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், நார்த்தாமலை, அன்னவாசல், இலுப்பூர், கறம்பக்குடி, திருமயம், திருவரங்குளம், கந்தர்வகோட்டை, காரையூர், பொன்னமராவதி, கீரனூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. பஸ்களும் வழக்கம்போல இயங்கின. இதனால் பஸ்நிலையங்கள், காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் அசம்பாவித நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் மாவட்டத்தின் எல்லா பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

Similar News