மயிலாடுதுறை அருகே வயலில் மின்சாரம் தாக்கி விவசாய கூலிதொழிலாளி பலி
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள நல்லத்துக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் அந்த பகுதியில் நிலத்தை குத்தகைக்கு பெற்று சாகுபடி செய்து வருகிறார்.
இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 55) என்பவர் கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ராஜேந்திரன், வயலுக்கு வேலைக்கு சென்றார். அப்போது ராஜேந்திரன், எதிர்பாராத விதமாக வயலில் எலிக்கு வைத்து இருந்த மின்கம்பியை மிதித்ததாக தெரிகிறது.
இதில் மின்சாரம் தாக்கி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன் மகன் மருதவாணன் (25) மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.