போலீஸ் நிலையத்திலிருந்து கைதி தப்பி சென்றதால் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம், பொறையாறு அருகே உள்ள பாலூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த அருளப்பன் மகன் லூர்துராஜ். தொழிலாளி. இவர் அப்பகுதியில் நடைபெறும் ஆற்றுப்பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த பாலம் வழியாக மாணவ-மாணவிகள் செல்வது வழக்கம்.
இந்தநிலையில் பாலம் கட்டப்பட்டதால் மாற்றுப் பாதை வழியாக மாணவ- மாணவிகள் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவிகளின் கையை பிடித்து லூர்துராஜ் மறுகரைக்கு செல்ல வைத்துள்ளார்.
இதனை கண்ட அதேபகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் பாலமுருகன் என்பவர் மாணவிகளின் கையை பிடித்துவிடும் லூர்துராஜ் செயலை தட்டிக்கேட்டு தகராறு செய்தார். மேலும் அவர் இதுபற்றி பொறையாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லூர்துராஜை கைது செய்தனர்.
போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த லூர்துராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையே போலீஸ் நிலையம் வந்த பாலூர் கிராம மக்கள் அங்கு லூர்துராஜ் இல்லாததால் போலீசார் மீது சந்தேகம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே லூர்துராஜ் காட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை கிராம மக்கள் மீட்டு மீண்டும் போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் லூர்துராஜ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை அடித்ததற்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் தனபால், கலியமூர்த்தி, எழுத்தர் ரவி ஆகியோரை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.