செய்திகள்

பாரிமுனை வங்கி கட்டிடத்தில் தீவிபத்து: அறையில் சிக்கிய 9பேர் மீட்பு

Published On 2016-11-18 14:46 IST   |   Update On 2016-11-18 14:46:00 IST
பாரிமுனை வங்கி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அதில் அறையில் சிக்கிய 9 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
ராயபுரம்:

பாரிமுனை, 2-வது கடற்கரை சாலை பகுதியில் ‘தாஸ் இண்டியா டவர்’ என்னும் 5 மாடி கொண்ட வணிக வளாகம் உள்ளது.

இதன் கீழ் பகுதியில் 5 தனியார் வங்கிகள் உள்ளன. மற்ற தளங்களில் பண பரிமாற்ற மையம், பங்கு வர்த்தக அலுவலகம் மற்றும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இன்று காலை 9 மணி அளவில் கட்டிடத்தின் கீழ் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கட்டிடத்தில் இருந்தவர்களும், வங்கியில் இருந்த ஊழியர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்ததும் எஸ்பிளனேடு, உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தீப்பிடித்த கீழ் தளத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

ஆனால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கட்டிடத்தின் 3-வது, 4-வது தளத்தில் இருந்து கரும்புகைகள் வந்தன. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னரே தீயை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

இந்த நிலையில் பங்கு வர்த்தக ஊழியர்கள் பெரம்பூரை சேர்ந்த விமலா, புதுவண்ணாரப்பேட்டை திலகம், தண்டையார்பேட்டை லட்சுமி, சுபாஷ், பாலா, கோகுல் மற்றும் கட்டிட உரிமையாளர் உள்பட 9 பேர் அறையில் சிக்கிக் கொண்டனர். மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட அவர்கள் கட்டிடத்தின் மாடிக்கு வந்து காப்பாற்றும்படி கதறினர்.

இதையடுத்து ராட்சத ஏணி மூலம் 12 பேரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. கட்டிடம் முழுவதும் கரும்புகையும், வெப்பமாகவும் இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் உடனடியாக உள்ள செல்ல முடியவில்லை.

தீப்பிடித்த நேரத்தில் கட்டிடத்தில் உள்ள பெரும்பாலான அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வரவில்லை. இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சில வங்கிகளில் ஊழியர்கள் மட்டும் வந்திருந்தனர். அவர்கள் தீப்பிடித்ததும் வங்கியின் ஜன்னல் மற்றும் அவசர வழியாக தப்பினர்.

இதைப்போல் முதல் மாடியில் உள்ள தனியார் வங்கி அலுவலகத்தில் 12 பேர் இருந்தனர். புகை மூட்டத்தில்மூச்சுத் திணறிய அவர்கள் அதிர்ஷ்டவசமாக வெளியே தப்பி வந்தனர். உடனடியாக அவர்கள் வெளியே வந்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

கீழ் தளத்தில் உள்ள ஜெனரேட்டர் அறையில் தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. ஜெனரேட் டர் அறை அருகே பை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் குடோன் இருந்தது. அதில் இருந்த பைகள் எரிந்ததால் பெரிய அளவில் தீப்பிடித்து கரும்புகை வந்துள்ளது.

உயிர் தப்பிய விமலா கூறும்போது, ‘இன்று காலை அலுவலகம் திறப்பதற்கு முன்பே நாங்கள் வந்தோம். 3-வது மாடியில் உள்ள அலுவலகத்தில் இருந்த போது கரும்புகை பரவியது. புகை மூட்டத்தால் கீழேயும் இறங்க முடியவில்லை. இதனால் எங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மாடியில் உள்ள இரும்பு கேட் மூடப்பட்டு இருந்ததால் உடனடியாக வெளியே செல்ல முடியவில்லை. எங்களது அலறல் சத்தம் கேட்டு கட்டிட உரிமையாளர் கேட்டை திறந்தார். இதன் பின்னரே நாங்கள் 9 பேரும் கட்டிடத்தின் மாடிக்கு சென்று உதவி கேட்டு கத்தினோம். தீயணைப்பு வீரர்கள் வந்து எங்களை பத்திரமாக மீட்டனர்’ என்றார்.

Similar News