செய்திகள்

கூட்டுறவு சங்கங்களில் பண பரிவர்த்தனையை தடை செய்வதா?: வைகோ கண்டனம்

Published On 2016-11-18 11:02 IST   |   Update On 2016-11-18 11:02:00 IST
கூட்டுறவு சங்கங்களில் பண பரிவர்த்தனையை தடை செய்வதா? என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கறுப்புப் பணத்தை ஒழித்திடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பர் 8 ஆம் தேதியன்று புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று வெளியிட்ட அறிவிப்பினை வரவேற்று ம.தி.மு.க. சார்பில் அறிக்கை வெளியிட்டேன்.

செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் தாள்களை மாற்றிக் கொள்வதில் ஏழை, நடுத்தர மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள 4474 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அவை அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன.

எந்தத் தேசிய வங்கிகளிலும் சேமிப்புக் கணக்கு வைத்திருக்காத லட்சக் கணக்கான மக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் அதன் தாய் வங்கியுமான மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் கணக்கு வைத்து வரவு செலவு செய்து வருகின்றனர். இந்த நெருக்கடியான கட்டத்தில் அவர்கள் தங்கள் சேமிப்புப் பணத்தை எடுக்க முடியாமல் பரிதவிக்கின்றனர்.

நவம்பர் 9 ஆம் தேதியில் இருந்து விவசாயிகள் தங்களிடம் இருந்த பணத்தைச் செலுத்தி கடனை அடைக்க முடியாமலும், வருங்காலத்தில் வட்டி, அபராத வட்டி செலுத்த வேண்டிய இக்கட்டான நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் பயிர்க்கடன் செலுத்தும் விவசாயிகள், கறவை மாடு கடன் செலுத்துவோர், நீண்ட, குறுகிய கால பயிர்க்கடன் பெறுவோர், சிறு வணிகர், மகளிர் குழு கடன் பெறுவோர், வங்கியில் சேமிப்பு வைத்திருந்து பணத்தை எடுக்க விரும்புவோர் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தடை உத்தரவால், கூட்டுறவு வங்கிகளில் பணம் செலுத்தவோ, சேமிப்புப் பணத்தை எடுக்கவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வித பரிவர்த்தனைகளும் மேற்கொள்ள முடியவில்லை.

இந்தக் கூட்டுறவு வங்கிகள் கடன் சங்கங்களை மாத்திரமே நம்பி இதுநாள் வரை பணப் பரிவர்த்தனை மேற்கொண்ட லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஆங்காங்கே தொடக்கக் கூட்டுறவு வங்கிகளை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

எனவே, மத்திய அரசு அவசர நிகழ்வாகக் கருதி உடனடியாகத் தலையிட்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் கிராமப்புறச் சேவையை மையமாகக் கொண்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News