செய்திகள்

ரிசர்வ் வங்கிக்கு எதிரான வழக்கு: 16-ம் தேதி விரிவான உத்தரவு வழங்குகிறது ஐகோர்ட்

Published On 2016-11-14 11:19 GMT   |   Update On 2016-11-14 11:19 GMT
ரிசர்வ் வங்கிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 16-ம்தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
சென்னை:

மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் வங்கிகளில் குவிந்தவண்ணம் உள்ளனர். ஏடிஎம் மையங்கள் மூலம் புதிய நோட்டுக்கள் விநியோகம் செய்ய மேலும் மூன்று வாரங்கள் வரை ஆகும் என்பதால், வங்கிகளில் கூட்டம் குறைந்தபாடில்லை. காலை முதல் மாலை வரை வரிசையில் நின்றாலும் பலர் பணம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இந்நிலையில், கூட்டுறவு வங்கியில் தனக்கு பணம் கிடைக்கவில்லை என்று கூறி வாடிக்கையாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரிசர்வ் வங்கியில் இருந்து கூட்டுறவு வங்கிக்கு பணம் வரவில்லை என  வங்கி ஊழியர்கள் தன்னை திருப்பி அனுப்பியதாக அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.10 கோடி வரை அனுப்பப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 4 இடங்களில் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வங்கிகளுக்கு அனுப்பப்படுவதாகவும், தினமும் 4 லட்சத்து 50 ஆயிரம் கோடி தேவைப்படுவதாகவும் தெரிவித்தது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் 16-ம் தேதி விரிவான உத்தரவு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

‘ரூபாய் நோட்டுக்களை மாற்றும் விஷயத்தில் பொதுமக்களுக்கு சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதேசமயம், வங்கி ஊழியர்களின் சிரமங்களையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

Similar News