செய்திகள்

குடியாத்தம் அருகே பள்ளி மாணவியை கழுத்தை நெரித்து கொன்ற தாத்தா

Published On 2016-11-14 10:57 GMT   |   Update On 2016-11-14 10:57 GMT
குடியாத்தம் அருகே மகனை திருமணம் செய்ய மறுத்த பள்ளி மாணவியை கழுத்தை நெரித்து கொன்ற தாத்தாவை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றத்தை சேர்ந்தவர் சுந்தரேசன். இவரது மனைவி அம்மு. இவர்களது மகள் சுஜி (வயது 15). பல ஆண்டுகளுக்கு முன்பு சுஜியின் பெற்றோர், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டனர். அதன்பிறகு, சுஜி தனது தாய் வழி பாட்டி நாகவேணி பராமரிப்பில் வளர்ந்தார்.

தற்போது, நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சுஜியின் தாத்தா முருகேசனும் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டதால், பாட்டி நாகவேணி, ஆம்பூர் அடுத்த மாதனூர் கூத்தம்பாக்கத்தை சேர்ந்த விநாயகம் (55) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

விநாயகத்துக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அவரது மனைவி கஸ்தூரி இறந்து விட்டார். ஆனால், 3 மகன்கள் உள்ளனர். கூலி வேலைக்கு சென்ற இடத்தில் நாகவேணியுடன் பழக்கம் ஏற்பட்டதால் விநாயகம் அவரை திருமணம் செய்து கொண்டார்.

மாணவி சுஜி தனது பாட்டி மற்றும் அவரது 2-வது கணவருடன் லிங்குன்றம் பகுதியிலேயே தொடர்ந்து வசித்து வந்தார். விநாயகம் தனது முதல் மனைவியின் குடும்பத்துடனும் தொடர்பில் இருந்தார். இந்த நிலையில், விநாயகத்தின் 3 மகன்களில் இருவருக்கு திருமணமாகி விட்டது.

இளைய மகன் விஜயசாரதி (22) என்பவருக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் வளர்ப்பு பேத்தியான சுஜியை, தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க விநாயகம் எண்ணினார். பாட்டி உறவில் மாமன் முறை என்றாலும் விநாயகத்தின் மகனை திருமணம் செய்து கொள்ள சுஜி விரும்பவில்லை.

குழந்தையில் இருந்து வளர்த்து, படிக்க வைத்து என்னுடைய விருப்பத்திற்கு எதிராக நடப்பதா? என ஆத்திரமடைந்த விநாயகம் பேத்தி சுஜியை திட்டினார். இதனால் தாத்தா, பேத்திக்கு இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டது. சுஜியை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தினர்.

படிக்க வேண்டும் என்று சுஜி கூறியும், அதனை பாட்டியும், தாத்தாவும் காதில் வாங்கி கொள்ளவில்லை. நேற்று காலை வழக்கம் போல் பாட்டி நாகவேணி விவசாய கூலி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சுஜியும், அவரது தாத்தா விநாயகம் மட்டும் இருந்தனர்.

திருமண விவகாரம் மீண்டும் பூதாகரமானது. மோதல் மூண்டதால், வளர்ப்பு பேத்தி என்று கூட பார்க்காமல் விநாயகம், துப்பட்டாவால் சுஜியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதையடுத்து, ஒன்றும் நடக்காதது போல கழுத்தை சுற்றி இறுக்கிய துப்பாட்டாவுடன் பேத்தியின் உடலை அங்கேயே போட்டு விட்டு விநாயகம் வீட்டில் இருந்து வெளியேறினார்.

விவசாய வேலைக்கு சென்ற நாகவேணியை சந்தித்து பேத்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். நாகவேணி பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடி போய் பார்த்தார். உடலை கட்டி தழுவி கதறி அழுதார். தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், சப்-இன்ஸ்பெக்டர் வஜ்ஜிரவேலு, ஏட்டுகள் வெங்கடேசன், யுவராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

மாணவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் சாவில் மர்மம் இருப்பதையறிந்த போலீசார், கொலை செய்யப்பட்டு இருக்கலாம்? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் பேத்தியை கொன்ற விநாயகம், நெல்லூர் பேட்டை கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் முன்னிலையில் சரணடைந்தார். போலீஸ் நிலையத்தில் விநாயகத்தை கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார். விநாயகத்தை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News