செய்திகள்

நோட்டுகளை மாற்ற மாற்று ஏற்பாடுகள் செய்ய மத்திய அரசு தவறி விட்டது: டி.ராஜா

Published On 2016-11-12 07:53 GMT   |   Update On 2016-11-12 07:53 GMT
ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற மாற்று ஏற்பாடுகள் செய்ய மத்திய அரசு தவறி விட்டது என்று டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆலந்தூர்:

இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கருப்பு பணத்தை எதிர்ப்பதிலும், ஊழலை எதிர்ப்பதிலும் இந்திய கம்யூனிஸ்டு உள்பட இடதுசாரிகள் முன்னிலையில் இருந்து போராடி வருகிறது.

கருப்பு பணம் கையகப்படுத்த வேண்டும். ஊழல் அகற்றப்பட வேண்டும் என்பதை இடதுசாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்காக போராடி வருகிறது.

இன்றைக்கு மோடி அரசின் அறிவிப்பு கருப்பு பணத்தை முழுமையாக வெளி கொண்டு வர முடியுமா? பலன் தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் மோடி பொறுப்பு ஏற்ற உடனே கருப்பு பணத்தை வெளிநாடுகளில் இருந்து கையகப்படுத்தி உள்நாட்டுக்கு கொண்டு வருவோம். குடிமக்களுக்கு தலா ரூ.15 லட்சம் தருவோம் என்று சொன்னார். தற்போது அதைபற்றி மோடி வாய் திறக்க மறுக்கிறார்.

இதே போல தேசியமய வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றி வருகின்ற கார்ப்பரேட் கம்பெனிகள் பற்றி மோடி பேச மறுக்கிறார்.

ரூ.500, ரூ1000 வெற்று காகிதம் என்று அறிவித்த மோடி அதை டிசம்பர் 30-ந்தேதிக்குள் மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்து இருக்கிறார். அதை சாதாரண மக்கள் மாற்றுவதற்கு அவதிப்படுகிறார்கள். இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய மத்திய அரசு தவறி விட்டது.

பாராளுமன்றம் கூட இருக்கிறது. இதை பற்றி பேச இருக்கிறோம். ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள் என்று மக்கள் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News