செய்திகள்

கோவில் பூசாரி நரபலி பூஜையில் ஈடுபட்டாரா? போலீசார் அதிரடி சோதனை

Published On 2016-11-05 15:46 IST   |   Update On 2016-11-05 15:46:00 IST
சேத்தியாத்தோப்பில் கோவில் பூசாரி நரபலி பூஜையில் ஈடுபட்டாரா? என போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் கருப்புசாமி கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக ஆறுமுகம் (வயது 38) உள்ளார்.

இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி அன்று பக்தர்களுக்கு குறி சொல்லி வந்தார். இதன் காரணமாக இக்கோவிலுக்கு கடலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

இந்த நிலையில், ஆறு முகத்தின் வீட்டில் சமையல்காரராக வேலை பார்த்து வந்த சந்திரன் என்பவர் சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

அதில், தன்னை பூசாரி ஆறுமுகம் ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை செய்ய முயன்றதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில், சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கைதான கோவில் பூசாரி ஆறுமுகம் நரபலி சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் ஆறுமுகத்தின் வீட்டில் அதிரடி சோதனை செய்தனர்.

மேலும், கோவில் வளாகத்திலும் சோதனை நடந்தது. நரபலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்கள் ஏதேனும் உள்ளதா? என விசாரணை நடத்தினர்.

அப்போது, ஆறுமுகத்தின் வீட்டில் இருந்த 50 சி.டி.க்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News