செய்திகள்

பெண்ணாடத்தை சேர்ந்த கூலிப்படை வாலிபர் கைது: தனிப்படை போலீசார் விசாரணை

Published On 2016-11-05 15:23 IST   |   Update On 2016-11-05 15:23:00 IST
கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பெண்ணாடத்தை சேர்ந்த கூலிப்படை வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை சேர்ந்தவர் ஸ்வீட்லின் (வயது 29). இவர் மீது கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், தொழுதூர், ராமநத்தம் ஆகிய பகுதிகளிலும், விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளி மேடுபேட்டை பகுதியிலும் கொலை வழக்கு உள்ளது.

மேலும் விருத்தாசலம், ராமநத்தம், பெண்ணாடம் ஆகிய பகுதிகளில் தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கும் உள்ளது.

இவர் கூலிப்படையில் சேர்ந்து பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். 2 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கொலை மற்றும் நகை பறிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்து வந்தார்.

இதையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் ஸ்வீட்லினை தேடிவந்தனர்.

விருத்தாசலம் பை-பாஸ் ரோட்டில் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்த ஸ்வீட்லினை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை மற்றும் வழிப்பறியில் ஈடுபட திட்டம் தீட்டி இருந்தாரா? என்று விசாரித்து வருகிறார்கள்.

Similar News