செய்திகள்

விபத்தில் வாலிபர் பலி: நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி- கோர்ட்டு தீர்ப்பு

Published On 2016-11-04 22:53 IST   |   Update On 2016-11-04 22:53:00 IST
விபத்தில் வாலிபர் இறந்த வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டு நடவடிக்கை எடுத்தது.
கடலூர்:

கடலூர் அருகே காராமணிக்குப்பம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சேகரன். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 26). மெக்கானிக். இவர் கடந்த 8–11–2012 அன்று நாகை மாவட்டம் சீர்காழி மெயின்ரோடான அ.புத்தூர் வழியாக வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த விபத்து வழக்கில் நஷ்ட ஈடு கோரி வெங்கடேஷ் தந்தை சேகரன், தாய் சாந்தி ஆகிய 2 பேரும் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் மூலம் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இறந்த வெங்கடேஷ் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூ.10 லட்சத்து 48 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் அந்த தொகையை செலுத்தாத காரணத்தால் மீண்டும் அவர்கள் நிறைவேற்ற மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கில் வட்டி மற்றும் செலவு தொகையுடன் சேர்த்து அரசு போக்குவரத்து கழகம் ரூ.13 லட்சத்து 82 ஆயிரத்து 314 வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று காரைக்காலில் இருந்து சென்னை செல்வதற்காக கடலூர் பஸ் நிலையம் வந்த அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கடலூர் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

Similar News