செய்திகள்

சிதம்பரம் அருகே லாரி மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்தது: 33 பயணிகள் காயம்

Published On 2016-11-02 15:55 IST   |   Update On 2016-11-02 15:55:00 IST
சிதம்பரம் அருகே லாரி மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் 33 பயணிகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிதம்பரம்:

வேதாரண்யத்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ் சிதம்பரம் புறவழிச் சாலையில் வந்த போது எதிரே கண்டெய்னர் லாரி வந்தது.

அப்போது ரோட்டின் குறுக்கே மாடு வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக லாரி டிரைவர் பிரேக் போட்டார். இருப்பினும் லாரி அவரது கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மாடு மீது மோதியது.

தொடர்ந்து அந்த லாரி எதிரே வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் மீதும் நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 33 பயணிகள் காயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்காக 5 பேர் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Similar News