ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் டிரைவர் வெட்டிக்கொலை
காஞ்சீபுரம்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சிவன்தாங்கல் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் கார்த்திக் (வயது 30). கார் டிரைவர்.
நேற்று இரவு அவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஜெயவேலுவுடன் சிவன்தாங்கலில் உள்ள பள்ளிக்கூடம் அருகே பேசிக் கொண்டு நின்றார்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் 2 பேரையும் சுற்றி வளைத்தனர்.
அதிர்ச்சி அடைந்த கார்த்திக் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டிச் சென்ற மர்ம கும்பல் சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க முயன்ற ஜெயவேலுவுக்கும் பலத்த வெட்டு விழுந்தது.
தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை கண்டதும் கொலைக் கும்பல் தப்பி ஓடி விட்ட னர். பலத்த காயம் அடைந்த ஜெயவேலுக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடந்த 18-ந் தேதி சிவன் தாங்கலில் ஒருவரது இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் கார்த்திக்கிக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் கண்ணையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலையுண்ட கார்த்திற்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.