செய்திகள்

துரைப்பாக்கம் கண்ணகிநகரில் கஞ்சா விற்பதில் கோஷ்டி மோதல்: 2 பேர் படுகொலை

Published On 2016-10-31 07:47 IST   |   Update On 2016-10-31 08:15:00 IST
துரைப்பாக்கம் கண்ணகி நகரில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர். அப்போது தப்பி ஓட முயன்ற எதிர்க்கோஷ்டியை சேர்ந்த வாலிபர், கழிவுநீர் குழாயில் ஏறும் போது தவறி விழுந்து இறந்தார்.
ஆலந்தூர்:

சென்னையில் சாலையோரம் குடியிருந்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டு உள்ளனர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்கள் ஆவர்.

கண்ணகி நகரில் ரவுடி களியா என்ற ரஞ்சித்குமார் (வயது 24) என்பவர் தலைமையில் ஒரு கோஷ்டியும், செங்கோட்டையன் என்பவர் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் கஞ்சா விற்று வந்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இவர்களுக்கு போலீஸ் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது.

தீபாவளியையொட்டி கஞ்சா விற்பதில் இரு கோஷ்டியினருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் செங்கோட்டையனை, களியா தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் செங்கோட்டையன் ஆதரவாளர்களுக்கும், களியா ஆதரவாளர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

அப்போது ரவுடி களியாவை எதிர் கோஷ்டியினர் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த களியா என்ற ரஞ்சித்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த களியாவின் ஆதரவாளர்கள் செங்கோட்டையன் கோஷ்டியை சேர்ந்த ஹார்பர் என்ற செபஸ்டின் என்ற மில்லர் (23) என்பவரை விரட்டிச் சென்றனர். இவர்களிடம் இருந்து தப்பிக்க மில்லர் அங்குள்ள ஒரு குடியிருப்பின் கழிவுநீர் குழாய் வழியாக ஏறி மொட்டை மாடிக்கு தப்பிச்செல்ல முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மில்லர் கீழே தவறி விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த மில்லர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இந்த கோஷ்டி மோதலில் படுகாயம் அடைந்த செங்கோட்டையன், சக்திவேல் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சக்திவேல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், கொலையான ரவுடி களியா மற்றும் தவறி விழுந்து இறந்த மில்லர் ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் கண்ணகி நகரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் தென்சென்னை இணை கமிஷனர் அன்பு, அடையாறு துணை கமிஷனர் சுந்தரவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அசம்பாவிதங்களை தடுக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பையும் சேர்ந்த தில்லானா (23), தமிழரசன் (20), மணிமாறன் (23) ஆகிய 3 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 8-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணகி நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் சமூக விரோத சம்பவங்கள் அதிகமாக நடந்து வருவது உண்டு. கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா விற்பனை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர் இறந்துவிட்டார். இதையடுத்து கண்ணகி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதையும் மீறி கஞ்சா விற்பதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News