செய்திகள்

சுசீந்திரத்தில் மதுபோதையில் தொழிலாளி அடித்துக்கொலை: நண்பர்கள் 4 பேர் சிக்கினர்

Published On 2016-10-30 18:04 IST   |   Update On 2016-10-30 18:04:00 IST
மது போதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்.ஜி.ஓ. காலனி:

சுசீந்திரத்தை அடுத்த நல்லூரை சேர்ந்தவர் மதன் (வயது 40). மதன் குளங்களை குத்தகைக்கு எடுத்து பூப்பறிக்கும் தொழில் செய்து வந்தார். இவரது நண்பர்கள் முத்துக்குமார் (26), ஆனந்த் (24), ஆறுமுகம் (28), கிருஷ்ணமணி (29), கோபால், சுந்தர்.

இவர்கள் அனைவரும் நேற்று தீபாவளியையொட்டி நல்லூர் பகுதியில் உள்ள வயல் வெளியில் அமர்ந்து மது அருந்தினர்.

போதை தலைக்கேறிய போது மதனின் நண்பர்கள் முத்துக்குமாருக்கும், ஆறு முகத்திற்கும் இடையே பண பிரச்சினை தொடர்பாக திடீர் தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறிமாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு மூண்டது. இதில் முத்துக்குமார், ஆறுமுகத்தை அடிக்க சென்றார். அதனை மதன் தடுத்தார். இதில் முத்துகுமாரின் ஆத்திரம், மதன் மீது திரும்பியது.

அவர் உருட்டு கட்டைகளால் மதனை அடித்தார். இதில் அவரது மண்டை உடைந்தது. தடுக்க சென்ற மற்ற நண்பர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அனைவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர்.

இது பற்றி அக்கம் பக்கத்தினர் மதனின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து கணவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மதன் பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சாம்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதன் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் மதனின் நண்பர்கள் முத்துக்குமார், ஆனந்த், ஆறுமுகம், கிருஷ்ண மணி, கோபால் மற்றும் சுந்தர் ஆகிய 6 பேர் மீதும் வழக்குபதிவு செய்தனர்.

இதில் முத்துக்குமார், ஆனந்த், ஆறுமுகம், கிருஷ்ணமணி ஆகிய 4 பேர் பிடிப்பட்டனர். அவர்களிடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

கொலையுண்ட மதனுக்கு பத்மா என்ற மனைவியும் ரோஸ்லின் ரீத் (18), டீனா (16) அமோகா (12) என்ற 3 மகள்களும் உள்ளனர்.

அவர்கள் மதனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News