செய்திகள்

தாம்பரத்தில் மழை வெள்ளத்தை சமாளிக்க 21 கண்காணிப்பு குழு அமைப்பு

Published On 2016-10-28 15:54 IST   |   Update On 2016-10-28 15:54:00 IST
மழை வெள்ளத்தை சமாளிக்க தாம்பரத்தில் 21 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்:

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது காஞ்சீபுரம் மாவட்டம் வெள்ளப் பெருக்கில் பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஏராளமான பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டது. எனவே, வர இருக்கின்ற வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்படும் வெள்ள அபாயத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டுள்ளன. பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டார்ச் விளக்குகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், ரெயின் கோட்டுகள், மணல் மூட்டைகள் போன்ற பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழை வெள்ளத்தை சமாளிக்க அதிகாரிகளை கொண்ட 51 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து குழுக்களிலும் தலா 11 அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். கடந்த வடகிழக்கு பருவமழையின் போது தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

எனவே தாம்பரம் பகுதியில் மட்டும் 21 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதற்கிடையே வர இருக்கின்ற பருவமழையின் போது ஏற்படும் வெள்ள அபாயத்தை தடுத்து சமாளிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் பல்லாவரத்தில் இன்று நடந்தது.

கூட்டத்துக்கு முதன்மை செயலாளர் ராஜாராமன் தலைமை தாங்கினார். 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அதிகாரிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி செயல் அலுவலர்கள், போலீஸ் உயர் அதிகரிகள் தீயணைப்பு துறை அதிகாரிகள் என அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Similar News