மதுராந்தகம் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது: 30 பயணிகள் படுகாயம்
மதுராந்தகம்:
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இதனால் பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது.
சென்னையில் இருந்து காரைக்குடிக்கு இன்று அதிகாலை அரசு விரைவு பஸ் புறப்பட்டது. சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்தனர்.
அதிகாலை 5 மணி அளவில் அச்சரப்பாக்கத்தை அடுத்த தொழபேடு நோக்கி பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் இருந்த 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்த பயணிகள் அனைவரும் அச்சரப்பாக்கம், திண்டிவனம், மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.