செய்திகள்

பல்லாவரம் அருகே பிளாஸ்டிக் பொருட்கள் குடோனில் தீ விபத்து

Published On 2016-10-27 14:36 IST   |   Update On 2016-10-27 14:37:00 IST
பல்லாவரம் அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் நாசமானது.
தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் லட்சுமி நகரில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் உள்ளது. இன்று காலை 6 தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டனர்.

திடீரென குடோனிக் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் குடோனில் இருந்து அலறியடித்து வெளியே வந்தனர்.

இது குறித்து சங்கர் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதும் எரிந்ததால் அப்பகுதியே புகை மூட்டமானது. துர்நாற்றமும் வீசியது. இதனால் தீயணைப்பு வீரர்களால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. சேதமதிப்பு பல லட்சம் இருக்கும்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News