செய்திகள்

68-வது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி விழுந்து நொறுங்கியது

Published On 2016-10-25 15:47 IST   |   Update On 2016-10-25 15:47:00 IST
68-வது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி விழுந்து நொறுங்கிய சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலைய உள்நாட்டு புறப்பாடு முனையத்தின் ஒன்றாவது நுழைவு வாயிலில் இன்று காலை 10.30 மணியளவில் இரண்டு பெரிய கண்ணாடிகள் கீழே விழுந்து நொறுங்கின.

திருச்சி, ஐதராபாத், டெல்லி செல்ல இருந்த பயணிகள் அப்போதுதான் விமான நிலையத்திற்குள் நுழைந்தனர். இதனால் கண்ணாடி விழுந்து நொறுங்கியதால் அவர்கள் பதட்டம் அடைந்தனர். நல்ல வேளையாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் விழுந்து நொறுங்குவது இது 68-வது முறையாகும்.

உள்நாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் இருந்து வெளிநாடு விமான நிலைய புறப்பாடு பகுதிக்கு கார் ஒன்று வேகமாக சென்றது. அந்த காரில் இருந்து ஆணி போன்ற கம்பி தெறித்து கண்ணாடிகள் மீது பட்டதால் அவை உடைந்து விழுந்ததாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைந்து வருவது தொடர் கதையாக உள்ள நிலையில் பயணிகளுக்கான பாதுகாப்பை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று விமான பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News