செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழைகால மீட்பு பணிக்கு 353 பேருக்கு சிறப்பு பயிற்சி: கலெக்டர் தகவல்

Published On 2016-10-25 12:10 IST   |   Update On 2016-10-25 12:10:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழைகால மீட்பு பணிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 353 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கடந்த முறை மழை வெள்ளத்தினால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நடப்பாண்டில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்தமுறை அதிகமாக பாதிக்கப்பட்ட 1128 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த இடங்களை 51 மண்டலங்களாக பிரித்து அவற்றில் தாசில்தார், பிடிஓ, நகராட்சி கமி‌ஷனர், போக்குவரத்து, மின்சாரம், காவல் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ள பாதிப்பின்போது மக்களுக்கு முதலுதவி அளிக்க 353 நபர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் பணிபுரிய 260 பொக்லைன் எந்திரங்களும், 55 ஜெனரேட்டர்களும், 1165 சிமிண்ட் மின்கம்பங்களும் தயார் நிலையில் உள்ளது.

மீன்வளத்துறை சார்பில் நீச்சல் தெரிந்த 600 மீனவர்களும், 200 படகுகளும் தயாராக உள்ளன. வெள்ளத்தினால் வி‌ஷ பூச்சிகளிடமிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் 350 இருளர் இன மக்களும் தயாராக உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு மற்றும் பேரிடர் காலங்களில் 24 மணிநேரமும் கலெக்டர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி மையம் அமைக்கப்பட்டு தற்போது வரை செயல்பாட்டில் உள்ளது.

பொது மக்கள் பாதிப்புகள் குறித்து 1077, 044- 27237107, 27237207 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருடாந்திர சராசரி மழை அளவு சுமார் 980 மி.மீ கடந்த ஆண்டு மாவட்டத்தில் 1808.60 மி.மீ மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News