செய்திகள்

திருச்செங்கோடு அருகே சிலிண்டர் வெடித்து கூரை வீடு தீ பிடித்தது: இளம்பெண் காயம்

Published On 2016-10-18 10:37 GMT   |   Update On 2016-10-18 10:37 GMT
திருச்செங்கோடு அருகே சிலிண்டர் வெடித்து கூரை வீடு தீ பிடித்து இளம்பெண் பலத்த காயம் அடைந்தார்.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ராமாபுரம் பகுதியில் வசித்து வருபவர் காமராஜ். இவர் ஆம்னி வேன் டிரைவராக உள்ளார். இவரது மனைவி சித்ரா (வயது 32). இவர்களுடைய வீட்டின் மேற்பகுதி கூரையால் வேயப்பட்டதாகும்.

இந்த நிலையில் இன்று காலையில் காமராஜ் வேலை நிமித்தமாக வெளியே சென்றார். இதையடுத்து கணவருக்கு தேவையான உணவு சமைத்து வைப்பதற்காக சித்ரா 7 மணி அளவில் வீட்டில் உள்ள சிலிண்டரில் அடுப்பை பற்ற வைத்தார்.

பின்னர் அடுப்பில் வைத்து உணவு சமைத்து செய்து கொண்டிருந்த போது, சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு, தீ மளமள பிடித்தது. இதனை கண்டதும், சித்ரா உடனே வீட்டை விட்டு வெளியே ஓடுவதற்குள் கியாஸ் சிலிண்டர் பயங்கரமாக வெடித்து சிதறியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

கழுத்து, கை, கால் உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சித்ரா அனுப்பி வைக்கப்பட்டார்.

இதற்கிடையே வீட்டில் பிடித்த தீ மளமளவென பரவி வீட்டின் மேற்கூரையில் தீ பிடித்துக் கொண்டது. இதில் வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்கள், தட்டு முட்டு சாமான்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின.

மேலும் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காமராஜ் ஓட்டி வந்த ஆம்னி வேனும் தீயில் சிக்கி கொளுந்து விட்டு எரிந்தது. சிறிது நேரத்தில் வேனின் இருக்கை, கண்ணாடிகள் எரிந்து வேன் எலும்பு கூடாக மாறியது.

இது பற்றி தகவல் அறிந்ததும், திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நிலைய அலுவலர் ராகவன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. பொன். சரஸ்வதி சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். மேலும் அவர் காயம் அடைந்த சித்ராவுக்கு ஆறுதல் கூறி, அரசிடம் இருந்து தேவையான நிவராண உதவிகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.

Similar News