செய்திகள்
மறைமலைநகர் அருகே சாலை தடுப்புச்சுவரில் மோதி போலீஸ் ஜீப் கவிழ்ந்தது: 5 போலீசார் படுகாயம்
மறைமலைநகர் அருகே சாலை தடுப்புச்சுவரில் மோதி போலீஸ் ஜீப் கவிழ்ந்து 5 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
செங்கல்பட்டு:
மறைமலைநகர் பகுதியில் போலீஸ்காரர்கள் கார்த் திக், சுந்தர், செல்வம், சதீஷ், முருகன் ஆகிய 5 பேர் நேற்று இரவு ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சிங்கப்பெருமாள் கோவில் வரை சென்றுவிட்டு அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மறைமலைநகரை அடுத்த பேரமனூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் போலீஸ்காரர்கள் கார்த்திக் உள்பட 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஜீப் கவிழ்ந்த போது அருகே மற்ற வாகனங்கள் வராததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.