செய்திகள்
மரம் அறுக்கும் தொழிற்சாலையில் வைக்கப்பட்டுள்ள கிழிந்த ரூபாய் நோட்டு மூட்டைகள்.

பண்ருட்டி அருகே ரோட்டில் சிதறிக்கிடந்தது ரிசர்வ் வங்கி ஏலம் விட்ட பணம்: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்

Published On 2016-10-12 10:14 IST   |   Update On 2016-10-12 10:14:00 IST
பண்ருட்டி அருகே ரோட்டில் சிதறிக்கிடந்தது ரிசர்வ் வங்கி ஏலம் விட்ட பணம் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள கோ.குச்சிபாளையம் கிராமத்தில் ரோட்டின் ஓரத்தில் நேற்று முன்தினம் இரவு துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன.

இதில் 1000, 500, 100 என ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதைப்பார்த்த பொதுமக்கள் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு முரளீதரன், இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், ராமநாதன் ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டனர்.

சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேற்கூரையை துளையிட்டு ரூ.6 கோடியை மர்மமனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

கோ.குச்சிபாளையத்தில் ரோட்டில் கிடந்த பணம் ரெயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து கிழிந்த ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டனர்.

மேலும் கோ.குச்சிப்பாளையம் கிராமத்தில் ஒவ்வொரு வீடாக சென்று அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது 3 வீடுகளில் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது ரோட்டின் ஓரத்தில் கிடந்த கிழிந்த ரூபாய் நோட்டுகளை தாங்கள் எடுத்து வந்து வீட்டில் வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள மரம்அறுக்கும் தொழிற்சாலைக்கு சென்று விசாரித்தனர். அப்போது தொழிற்சாலை நிர்வாகிகள் போலீசாரிடம் கூறியதாவது:-

புதுவையில் மரம் அறுக்கும் தொழிற்சாலை உள்ளது. அந்த தொழிற்சாலை உரிமையாளர் சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து கிழிந்த ரூபாய் நோட்டுகளை ஏலம் எடுத்து கொண்டு வருவார். அந்த ரூபாய் நோட்டுகளை எங்களுக்கு விற்பார்.

நாங்கள் அவர்களிடமிருந்து 3 லாரிகளில் 10 டன் கிழிந்த நோட்டுகளை வாங்கி வந்தோம். இந்த கிழிந்த நோட்டுகளை துண்டுதுண்டாக வெட்டி எங்களிடம் உள்ள மரத்தூளுடன் கலந்து ஓட்டல் மற்றும் டீக்கடைகளுக்கு விற்பனை செய்வோம்.

மரத்தூளுடன் கிழிந்த ரூபாய் நோட்டுகள் கலந்து இருப்பதால் அவை நன்றாக எரியும். இதனால் எங்களிடம் பலர் மரத்தூள்களை வாங்கிச் செல்வார்கள்.

ஆயுதபூஜையையொட்டி மரம்அறுக்கும் தொழிற்சாலையில் துப்புரவு பணி நடைபெற்றது. அப்போது இங்கு ஒரு மூட்டையில் இருந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாயாமானது.

ரோட்டின் ஓரத்தில் அதை யார் வீசிவிட்டு சென்றார்கள் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் இருந்த மூட்டையை ரோட்டில் வீசி சென்றவர்கள் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News