செய்திகள்

உல்லாசத்துக்கு அழைத்த மாமனாரை தீர்த்துக்கட்டிய மருமகள் - பரபரப்பு வாக்குமூலம்

Published On 2016-10-07 15:10 IST   |   Update On 2016-10-07 15:10:00 IST
உல்லாசத்துக்கு அழைத்ததால் மாமனாரை தீர்த்துக்கட்டிதாக மருமகள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேத்தியாதோப்பு:

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகேயுள்ள வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி (வயது 70). இவர் கடந்த 30-ந் தேதி சிதம்பரம்- விருத்தாசலம் சாலையில் உடல் முழுவதும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிதம்பரம்ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி பரிதாபமாக இறந்தார்.

வாகனம் மோதி இறந்திருக்கலாம் என சேத்தியாதோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கந்தசாமியின் சாவில் மர்மம் உள்ளது. அவரை யாரோ அடித்துக்கொலை செய்திருக்கிறார்கள் என அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கந்தசாமியின் மருமகள் செந்தமிழ்செல்வி (50)யை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கந்தசாமியை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

போலீசில் செந்தமிழ் செல்வி அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

நான் எனது கணவர், குழந்தைகளுடன் தனி வீட்டில் வசித்து வந்தேன். திடீரென எனது கணவர் அன்பழகன் இறந்துவிட்டார். இதையடுத்து நான் கூலித்தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்தேன். அன்பழகன் இறந்த சில நாட்கள் ஆனதும் மாமனார் கந்தசாமி, எனக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். தினமும் இரவு கந்தசாமி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, என்னை உல்லாசத்துக்கு அழைப்பார். நான் அவரை திட்டி அனுப்பி விடுவேன். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகமானது.

கடந்த 29-ந் தேதி இரவு மது குடித்துவிட்டு வந்த கந்தசாமி, என்னை ஆசைக்கு இணங்குமாறு கூறினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், அவர் ஆபாசமாக திட்டினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் கந்தசாமியின் தலை மற்றும் உடலில் சரமாரியாக தாக்கினேன். சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.

அதன்பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் எனது மாமனாரின் அண்ணன் மகனான வேல்முருகன்(44) எனது வீட்டுக்கு வந்தார். அவரிடம் நான், நடந்ததை கூறினேன். உடனே அவர் எனக்கு உதவி செய்வதாக கூறினார்.

கந்தசாமியின் உடலை சாலையில் போட்டு விபத்தில் அடிபட்டது போன்று நாடகமாடலாம் என முடிவு செய்தோம். அதன்படி மயங்கி கிடந்த கந்தசாமியை 2 பேரும் தூக்கிச்சென்று, சிதம்பரம்-விருத்தாசலம் சாலையில் போட்டுவிட்டு எதுவும் தெரியாததுபோல் இருந்தோம்.

கிராம மக்கள் எங்களிடம் கேட்டபோது, விபத்தில் கந்தசாமி அடிபட்டதாக கூறி நாடகமாடினோம். ஆனால் போலீசார் என்னை பிடித்துவிட்டனர். மேற்கண்டவாறு செந்தமிழ்செல்வி வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

செந்தமிழ்செல்வி கொடுத்த தகவலின் பேரில் வேல்முருகனையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News