செய்திகள்

புதுக்கோட்டை மாவட்ட வேட்பாளர்கள் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்: கலெக்டர் அறிவிப்பு

Published On 2016-10-01 13:46 IST   |   Update On 2016-10-01 13:46:00 IST
வேட்பாளர்கள் பொதுகூட்டங்கள் அல்லது ஊர்வலங்களுக்கு ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டுமானால் காவல்துறையினரிடம் எழுத்து மூலமாக முன் அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடை பெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் 17.10.2016 மற்றும் 19.10.2016 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் 26.09.2016 அன்று முதல் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. இதில் அறந்தாங்கி, ஆவுடை யார்கோவில் மற்றும் மணமேல்குடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வேட்புமனுக்கள் பெறப்படும் இடங்கள் மற்றும் வாக்குப்பெட்டிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் துரையரசபுரம் அரசினர் பல்தொழில்நுட்ப கல்லூரி, பெருநாவலூர் ஊராட்சி, கல்லனேந்தல் விளக்கு பாரதிதாசன் பல்கலைக் கழக மாதிரி கல்லூரி, மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் அறந்தாங்கி, ஆவடையார்கோவில், மணமேல்குடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறும் இடம், விண்ணப்பம் வழங்கும் இடம், வாக்காளர் பட்டியல் விற்பனை செய்யு மிடம், வழங்கப்படும் விண்ணப்பங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் பார்வையிடப்பட்டது.

மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி சுத்தப்படுத்தவும், வாக்குகளை விரைவாக எண்ணும் வகையில் அதிக மேஜை மற்றும் நாற்காலி வசதிகள் ஏற்படுத்தவும், குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்சார வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், வேட்பாளர்களிடமிருந்து பெறப்படும் வேட்பு மனுக்களை சரிபார்த்து வாங்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வேட்பாளர்கள் பொதுகூட்டங்கள் அல்லது ஊர்வலங்களுக்கு ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டுமானால் காவல்துறையினரிடம் எழுத்து மூலமாக முன் அனுமதி பெற வேண்டும் .

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொய்யாமொழி செல்வராஜ், திலகவதி, தமிழ்ச்செல்வன், வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Similar News