செய்திகள்

வேப்பூரில் கோவிலில் ரூ.2 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை

Published On 2016-09-26 10:49 IST   |   Update On 2016-09-26 10:49:00 IST
வேப்பூரில் கருப்பையா கோவிலின் உண்டியலை உடைத்து வெள்ளி மணி மற்றும் பணம் கொள்ளை போன சம்பவம் பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள காளியாமேடு பகுதியில் கருப்பையா கோவில் உள்ளது. இந்தகோவில் மிகவும் பழமையானது. வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்

கடலூர், விழுப்புரம், சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். நேர்த்திக்கடனாக பக்தர்கள் வெண்கலமணியை வழங்குவார்கள். இந்த மணிகள் கோவிலின் முன் கட்டித்தொங்க விடப்பட்டிருந்தன.

இதைநோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நேற்று இரவு அங்கு வந்தனர். கோவிலின் முன்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்தனர். கோவில் முன்பு இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்தனர்.

மேலும் கோவிலில் கட்டித் தொங்க விடப்பட்டிருந்த 70 மணிகளை அறுத்தெடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலில் கொள்ளை நடத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கோவிலில் கொள்ளையடித்த மர்மமனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வேப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 3 கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

தற்போது 4-வதாக கோவிலில் கொள்ளை நடந்துள்ளது. தொடர்ந்து கொள்ளை சம்பவம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கொள்ளையர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News