செய்திகள்

பண்ருட்டி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.2.5 லட்சம் கொள்ளை

Published On 2016-09-24 10:58 IST   |   Update On 2016-09-24 10:58:00 IST
பண்ருட்டி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.2.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள ஆத்திரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் நெய்வேலியில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக வேலைபார்த்து வருகிறார்.

நேற்று நள்ளிரவு கடையை மூடிவிட்டு மது விற்ற பணம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வரும் வழியில் அதே ஊரை சேர்ந்த செல்வகுமார், அனந்தராமன் ஆகிய 2 பேரையும் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண் டார்.

மோட்டார் சைக்கிள் பேர்பெரியாண்குப்பம் அருகே உள்ள முந்திரி காடு பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது முகமூடி அணிந்து வந்த 4 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து 3 பேரையும் தாக்கினர். பின்னர் செந்தில்குமார் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.

இதுகுறித்து செந்தில்குமார் முத்தாண்டிகுப்பம் போலீசுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் வழக்குபதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Similar News