செய்திகள்

போக்குவரத்து தேவைகளை மெட்ரோ ரெயில் நிறைவேற்றும்: வெங்கையா நாயுடு பேச்சு

Published On 2016-09-21 14:29 IST   |   Update On 2016-09-21 14:29:00 IST
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் பயணிகள் போக்குவரத்தில் சிக்காமல் எளிதில் விமான நிலையத்தை அடைவதற்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்தை உதவியாக இருக்கும் என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
சென்னை:

சென்னை விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

சென்னை நகரில் மக்கள் தொகையும், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் வளர்ந்துள்ளது. மாநகர பேருந்துகளும், புறநகர ரெயில்களும், மேம்பால ரெயில்களும் போக்குவரத்து வசதிகளை அளிக்கின்றன.

இந்த சென்னை மெட்ரோ ரெயில் திட்டமானது சென்னைக்குள் பொது மக்களுக்கான போக்குவரத்தில் கணிசமான பங்காற்றும். சென்னைவாழ் மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட அரசுப் போக்குவரத்து வசதியை இது அளிக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரெயில் நிலையமானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களை இணைப்பதாக உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் பயணிகள் போக்குவரத்தில் சிக்காமல் எளிதில் விமான நிலையத்தை அடைவதற்கு உதவியாக இருக்கும்.

மீனம்பாக்கம் மற்றும் நங்கநல்லூர் சாலை மெட்ரோ மற்றும் சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பிரதானமாக குடியிருப்பு பகுதிகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் அந்தப் பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு செல்வோருக்கு வசதிகளை அளிக்கும். சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் சென்னை மெட்ரோ திட்டத்தால் பொதுமக்கள் அதிக பயன் பெறுவார்கள்.

மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்காக சென்னை மக்கள் நீண்ட காலம் காத்திருக்காத வகையில் இந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும். முதலாவது கட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதற்கு முழு ஆதரவும் அளிக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News