செய்திகள்

காஞ்சீபுரம் அருகே போலி டாக்டர் கைது

Published On 2016-09-20 11:39 IST   |   Update On 2016-09-20 11:39:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் போலி டாக்டர் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த ஏகனாம்பேட்டை பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவம் படிக்காமல் போலி டாக்டர் சிகிச்சை அளிப்பதாக காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜய குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மருத்துவ குழுவினர் நேற்று இரவு ஏகனாம்பேட்டையில் ‘காந்திஜி கிளினிக்’ என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வந்த பாபுராஜ் என்பவரின் சான்றிதழ்களை பரிசோதித்தனர்.

அவர் பி.ஏ., படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்றும் அப்பகுதியில் சில மாதங்களாக போலி டாக்டராக மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து வாலாஜா பாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப் பதிவு செய்து போலி டாக்டர் பாபு ராஜை கைது செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலில் பலர் உயிர் இழந்ததையடுத்து போலி டாக்டர்களை பிடிக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதுவரை மாவட்டம் முழுவதும் 33 போலி டாக்டர்கள் பிடிபட்டு உள்ளனர்.

தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்திலும் போலி டாக்டர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி போலி டாக்டர்களை பிடிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News