செய்திகள்

கோபி அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

Published On 2016-09-19 11:26 GMT   |   Update On 2016-09-19 11:27 GMT
கோபி அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோபி:

கோபி அருகே உள்ள ஓடத்துறை ஊராட்சிக்குட்பட்டது. நஞ்சகவுண்டம் பாளையம். இங்குள்ள 1-வது வார்டில் குடிநீருக்காக 3 போர் போடப்பட்டுள்ளது.

இதில் 2 போர் ரிப்பேராகி உள்ளது. ஒரு போரில் மட்டும் தண்ணீர் வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த போரிலும் தண்ணீர் சரியாக வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் சரியாக கிடைக்காததால் அவதிபட்டனர். இந்த நிலையில் இன்று அப்பகுதியை சேர்ந்த 50 பெண்கள் 30 ஆண்கள் என பொதுமக்கள் காலி குடங்களுடன் கோபி- ஈரோடு ரோட்டில் ஓடக்கரை பிரிவில் இன்று காலை 8 மணிக்கு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கோபி போலீசார் விரைந்தனர். மேலும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், தாசில்தார் குமரேசனும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அவர்கள் மறியல் நடத்திய பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். போர்வெல் சரி செய்யப்பட்டு சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதை தொடர்ந்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News