செய்திகள்

ஜான்குமாருக்கு ரூ.100 கோடி கொடுத்ததாக கூறுவது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு: நாராயணசாமி பேட்டி

Published On 2016-09-18 16:47 IST   |   Update On 2016-09-18 16:47:00 IST
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதற்கு ஜான்குமாருக்கு ரூ.100 கோடி கொடுத்ததாக கூறுவது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பண்ருட்டி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று பண்ருட்டி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரிநீர் பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை கர்நாடக அரசு மதித்து செயல்படவேண்டும். கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழர்களின் கட்டிடங்கள், அலுவலகங்கள், வாகனங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். காவிரிநீர் பிரச்சினையில் தற்கொலை செய்வது சரியான தீர்வு ஆகாது.

நம்முடைய உரிமையை நாம் கேட்டு போராடி பெற வேண்டும். புதுவையை பொறுத்தவரை காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுப்போம்.

புதுவையில் சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சி 100 நாட்களை கடந்து விட்டது. பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். தொழிற்சாலைகள் தொடங்க 30 நாளில் அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைவிட புதுவையில் தொழிற்சாலைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. புதுவை மக்கள் ஆச்சரியப்படும் வகையில் மக்கள் முன்னேற்றத்துக்கு புதிய திட்டங்களை செயல் படுத்த உள்ளோம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நாராயணசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: நெல்லித்தோப்பு தொகுதியில் நீங்கள் போட்டியிடுவதற்காக ஜான்குமார் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா செய்வதற்கு நீங்கள் ரூ.100 கோடி கொடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளதே?

பதில்: எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆதாரம் இல்லாதது. இது அபத்தமான குற்றச்சாட்டு. இதில் உண்மை இல்லை.

கே: ஜான்குமார் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளார்களே?

ப: ஜான்குமார் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததற்கும், அவர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனையிட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை. வருமான வரித்துறையினர் எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கின்றன என்று கூறி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News