திட்டக்குடி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
திட்டக்குடி அருகே உள்ள செவ்வேடி பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 42). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் பச்சையம்மாள்(45) இவர்கள் இருவரும் நெடுங்குளத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலைபார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அவர்கள் இன்று காலை வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டனர். செவ்வேடி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றனர். நீண்டநேரமாகியும் பஸ் வராததால் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் லிப்ட் கேட்டு பச்சையம்மாளும், பொன்னமாளும் சென்றனர்.
செவ்வேடி நெடுங்குளம் சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தது. முன்னாள் சென்ற டிராக்டரை முந்திசெல்ல முயற்சி செய்தபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் கீழே விழுந்தனர்.
இந்தவிபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொன்னம்மாள் மீது டிராக்டர் ஏறிச்சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிர் இழந்தார்.
பச்சையம்மாள் மீதும் டிராக்டர் ஏறியது அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொன்னம்மாள் உடலை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த பச்சையம்மாளுக்கு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.