கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து பல்லாவரத்தில் ரெயில் மறியல்
தாம்பரம்:
தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்து உள்ளது. அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதும், தமிழக வாகனங்கள் சேதப்படுத்துவதும் நடந்து வருகிறது.
இதற்கு தமிழக அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். போராட்டங்களும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை பல்லாவரம் ரெயில் நிலையத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் தமிழ்வாணன் தலைமையில் திரண்டனர்.
அவர்கள் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய படி கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயிலை மறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பல்லாவரம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தமிழ்வாணன் உள்பட 25 பேரை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் சிறிது நேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
விருகம்பாக்கம் சின்மயா நகரில் உள்ள கர்நாடகா வங்கியை வீரத்தமிழர் பேரவையின் தலைவர் தங்கபாஸ்கர் தலைமையில் பொதுச் செயலாளர் பூபதி ராஜா, தென்சென்னை மாவட்ட செயலாளர் மாணிக்தங்கராஜ், இளைஞரணி மாநில செயலாளர் சம்பத் உள்பட பலர்முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடகாவில் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ‘விருகம்பாக்கம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.