மயிலாடுதுறை அருகே லாரி வயலில் கவிழ்ந்து டிரைவர் படுகாயம்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மூவாலூர் மகராஜபுரம் பகுதியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 315 நெல் மூட்டைகளை அசிக்காட்டை சேர்ந்த வியாபாரி கண்ணன் கொள்முதல் செய்து லாரியில் ஏற்றி சென்றார். லாரி அப்பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங்கை கடந்தபோது அங்கு போடப்பட்ட வேகத்தடையில் ஒருபக்கமாக சரிந்து வயலில் கவிழ்ந்தது.
இதில் லாரியை ஓட்டிவந்த நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுர் கொத்தனூர் மகன் ரெங்கராஜ்(42) படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ரெயில்வே நிர்வாகம் போட்டுள்ள வேகத்தடை கான்கிரீட்டில் செய்த ஸ்லாப் 5 எண்ணிக்கை குறைவான அகலத்தில் போடப்பட்டது. இதனால் லாரியில் லோடு ஏற்றி வந்தபோது ஒருபக்க வீல் மட்டும் வேகத்தடையில் ஏறியதால் மறுபுறம் பள்ளத்தில் இறங்கி லாரி வயலில் கவிழ்ந்தது. இதை ரெயில்வே நிர்வாகம் உடன் சரிசெய்து அகலப்படுத்த வேண்டும் என்றனர்.