நாகை மாவட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.34 லட்சம் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் பழனிசாமி வழங்கினார்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுவாழ்வு திட்ட செயல்பாட்டின் ஒரு பகுதியாக கீழ்வேளுர் வட்டாரத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் புதுவாழ்வு மனநல திட்டம் செயல்பட்டு வருகிறது. கலெக்டர் அறிவுரையின்படி இம்மாவட்டத்தில் மொத்தம் 386 மனநலம் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் மனநலம் குன்றியவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிறப்பு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இவர்களில் 124 பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு தனிநபர் கடனாக ரூ. 15 லட்சத்து 54 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆடு மற்றும் கறவை மாடுகள் வாங்குவதற்காக வழங்கப்பட்ட இக்கடனை பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறார்கள்.
சென்ற 2015-ம் ஆண்டு கீழ்வேளுர் வட்டாரத்தில் உள்ள 3 களப்பகுதிகளில் 100 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி மற்றும் தீவனம், உபகரணங்கள் உட்பட தலா ரூ. 2500 வீதம் மொத்தம் ரூ. 2,50,000 நிதியுதவி வழங்கப்பட்டு பயன்பெற்று வருகிறார்கள். அந்த நாட்டுக்கோழி வளர்ப்பின் மூலம் முட்டைகள் பெறப்பட்டு விற்பனை செய்து பயனடைந்து வருகிறார்கள்.
இவ்வாண்டு கீழ்வேளுர் வட்டாரத்திற்கு உட்பட்ட 3 களப்பகுதிகளில் 262 பயனாளிகளுக்கு நாட்டுக் கோழி வளர்ப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டு நாட்டுக்கோழிகள், தீவனம் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கு ரூ. 6,55,000 நிதி அனுமதிக்கப்பட்டு அதற்கான நாட்டுக்கோழி குஞ்சுகள், தீவனம் மற்றும் உபகரணங்களை வழங்கப்பட்டது.
மேலும் தனிநபர் கடனாக 209 மனநலம் குன்றிய மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆடு மற்றும் மாடு வளர்ப்பிற்காக தனிநபர் கடனுதவி ரூ.34,12,500-ஐ கலெக்டர் பழனிசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, புதுவாழ்வு மாவட்ட திட்ட மேலாளர் மணிராஜ், மாவட்ட பால்வள ஆலோசகர் டாக்டர் இப்ராஹிம், உதவி திட்ட மேலாளர் மனுநீதிசோழன், அணி தலைவர்கள் மற்றும் திட்டப்பணியாளர்கள் உடனிருந்தனர்.