செய்திகள்
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் எஸ்.பி. விசாரணை நடத்திய ஓய்வறை.

ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: ஈரோடு ரெயில் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. விசாரணை

Published On 2016-08-26 15:28 IST   |   Update On 2016-08-26 15:29:00 IST
ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை போன வழக்கு தொடர்பாக ஈரோடு ரெயில் நிலையத்தில் 3-ம் கட்டமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு:

கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் வழியாக சென்னை சென்ற ரெயிலில் ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

பணம் இருந்த ரெயில் பெட்டியின் கூரையை பிரித்து குதித்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொள்ளை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் சென்னை, விருத்தாச்சலம், சேலம், ஈரோடு ஆகிய ரெயில் நிலையங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 2-ம் கட்ட விசாரணை நடந்துள்ளது. முதல் கட்டமாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஏட்டு விசாரணை நடத்தினார். 2-ம் கட்டமாக இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரணையை மேற்கொண்டார்.

இந்த நிலையில் இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் 3-ம் கட்டமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாகஜோதி, டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்படையினர் கொண்ட குழுவினர் இந்த விசாரணை நடத்தினர்.

ஈரோடு ரெயில் நிலைய 1-வது பிளாட்பாரத்தில் உள்ள ஓய்வறையில் இந்த விசாரணை நடந்தது.

பணம் கொள்ளையடிக்கப்பட்ட ரெயில் பெட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பிறகு சேலத்துக்கு அனுப்பபட்டது. இதனால் ஈரோட்டில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்திருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் இந்த அதிரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் நடந்த போது ஈரோடு ரெயில் நிலையத்தில் பணிபுரிந்த போலீசார் மற்றும் பணிமனை ஊழியர்களிடமும் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையால் ஈரோடு ரெயில் நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Similar News