செய்திகள்

சத்திய மங்கலம் அருகே காகித ஆலை அரவை எந்திரத்தில் சிக்கி பீகார் மாநில வாலிபர் பலி

Published On 2016-08-24 09:48 IST   |   Update On 2016-08-24 09:48:00 IST
சத்திய மங்கலம் அருகே காகித ஆலை அரவை எந்திரத்தில் சிக்கி பீகார் மாநில வாலிபர் பரிதாபமாக பலியானார்
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள கொக்கரகுண்டி கிராமத்தில் அக்‌ஷரா என்ற காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த காகித ஆலையில் பீகார் மாநில இளைஞர்கள் பலர் அங்கு தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இதில் விக்கிகுமார் (வயது 19) என்ற வாலிபரும் பணி புரிந்து வந்தார்.

நேற்று இவர் காகித ஆலை கழிவுகள் செல்லும் கன்வேயர் பெல்டில் வேலை செய்தார். அப்போது கன்வேயர் பெல்டில் நடந்து காகித அட்டைகளை விக்கிகுமார் தள்ளி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கன் வேயர் பெல்டில் அவர் தவறி விழுந்து விட்டார். இதனால் அவர் ‘‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்’’ என கூக்குரலிட்டார். கீழே நின்று கொண்டிருந்த மற்ற பீகார் மாநில வாலிபர்களும் சத்தம் போட்டனர். ஆனால் அதற்குள் விக்கி குமார் காகித ஆலையின் எந்திரத்தில் சிக்கி கொண்டார்.

இதில் வாலிபர் விக்கி குமார் உடல் காகித கூழ் போல் கூழாகி கொடூரமான முறையில் பலியானார்.

அவரது உடலில் இருந்து கால், கை, எலும்பு மற்றும் நெஞ்சு எலும்பு மட்டும் தான் மிஞ்சியது. அதுவும் பவுடர் போல் நசுங்கி காணப்பட்டது. அவர் அணிந்திருந்த டீ சர்ட்டும் வெளியே வந்தது.

தங்கள் கண் முன் சக தொழிலாளி உடல் கூழாகி இறந்த சம்பவத்தை பார்த்ததும் மற்ற பீகார் மாநில இளைஞர்கள் கதறி அழுது துடித்தனர்.

அவர்கள் கூறும் போது, ‘‘கன்வேயர் பெல்டில் விக்கி குமார் விழுந்த போது உடனடியாக ஆலை நிர்வாகம் எந்திரத்தை நிறுத்தி இருந்தால் விக்கியை காப்பாற்றி இருக்கலாம். மேலும் பணி பாதுகாப்பு உபகரணங்கள் அங்கு தயார் நிலையில் இல்லாததும் உயிரிழப்புக்கு காரணம்’’ என்று கூறினர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆலை நிர்வாக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News