செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகே பள்ளி நிர்வாகி வீட்டில் ரூ.30 ஆயிரம் கொள்ளை

Published On 2016-08-22 15:44 IST   |   Update On 2016-08-22 15:44:00 IST
நெல்லிக்குப்பம் அருகே பள்ளி நிர்வாகி வீட்டில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மாருதி நகரைச் சேர்ந்தவர் வசந்தகிருஷ்ணன்(வயது 35). தனியார் பள்ளியில் மேனேஜராக இருந்து வருகிறார்.

நேற்று இரவு இவரது வீட்டில் மின்தடை ஏற்பட்டது. எனவே புழுக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வசந்தகிருஷ்ணன் வீட்டைப்பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இரவு அங்கேயே தங்கிவிட்டனர்.

இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை திறந்து அதிலிருந்து ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 செல்போன்களை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இவைகளின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

இன்று காலை வீட்டிற்கு வந்த வசந்தகிருஷ்ணன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். தலைமறைவான கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது. தற்போது பள்ளி நிர்வாகி வீட்டில் கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Similar News