செய்திகள்

கடலூரில் அதிகாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2016-08-21 16:25 IST   |   Update On 2016-08-21 16:25:00 IST
கடலூரில் அதிகாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் வண்ணார பாளையம் கே.கே. நகர் கம்பன் தெருவைச் சேர்ந்தவர் ராஜமச்சேந்திரசோழன் (வயது 62). கால்நடை பராமரிப்புத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது மருமகள் கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்திற்காக அவரை புதுவையில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 19-ந் தேதி சேர்த்தனர்.

இதனால் ராஜமச்சேந்திரசோழன் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு புதுவைக்கு சென்றிருந்தனர்.

இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் 4 பீரோக்கள் இருந்தன. அந்த பீரோக்களை உடைத்தனர்.

அதில் இருந்த 10 பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் லேப்-டாப், ஐபோன், கேமரா, ஏ.டி.எம்.கார்டு ஆகியவைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

இன்று காலை ராஜமச்சேந்திரசோழன் வீட்டிற்கு வந்தார். வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தேவனாம்பட்டிணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

கொள்ளை நடந்த இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு தேவனாம்பட்டிணத்தை நோக்கி ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

Similar News