செய்திகள்

விருத்தாசலம் அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

Published On 2016-08-20 09:22 IST   |   Update On 2016-08-20 09:22:00 IST
விருத்தாசலம் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த் 3 மாணவர்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எடைசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் வெற்றிவேல்(வயது 10). இவரும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி(10), குமரவேல்(10) ஆகியோரும் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று காலை 3 பேரும் பள்ளிக்கு சென்றனர். பள்ளி முடிந்ததும் மாலையில் வீடு திரும்பினர். பின்னர் அந்த பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு 3 பேரும் புறப்பட்டனர்.

ஆனால் அவர்கள் கோவில் விழாவுக்கு செல்லவில்லை. அங்குள்ள ஏரிக்கு சென்றனர். ஏரியில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர்.

அந்த சமயத்தில் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர்கள் சகதியில் சிக்கினர். ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பினர். அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் அவர்களை காப்பாற்ற யாரும் வரவில்லை.

வெற்றிவேல், கார்த்தி, குமரவேல் ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். சிறிது நேரத்தில் அவர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.

மாணவர்கள் 3 பேரும் இரவு வீட்டுக்கு வராததால் அவர்களது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் அவர்களை தேடினர்.

இந்தநிலையில் இன்று அதிகாலை அங்குள்ள ஏரியில் வெற்றிவேல், கார்த்தி, குமரவேல் ஆகிய 3 பேரின் பிணங்களும் மிதந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மங்கலம் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். குளத்தில் மூழ்கி பலியான 3 மாணவர்களின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர்களின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. ஒரே கிராமத்தில் 3 மாணவர்கள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News