செய்திகள்

சென்னையில் 2 சூதாட்ட கிளப்புகளில் 26 பேர் கைது: ரூ.6.34 லட்சம் பறிமுதல்

Published On 2016-08-19 02:48 GMT   |   Update On 2016-08-19 02:49 GMT
சென்னையில் விபசார விடுதிகளை மூடுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையைப் போன்று சூதாட்ட கிளப்புகளை மூடுவதற்கும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சென்னை:

சென்னையில் விபசார விடுதிகளை மூடுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையைப் போன்று சூதாட்ட கிளப்புகளை மூடுவதற்கும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2 கிளப்புகளில் சோதனை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.6.34 லட்சம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் விபசார விடுதிகளை ஒழிப்பதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விபசார விடுதிகளில் சோதனை நடத்தி, தரகர்கள் கைது செய்யப்படுகிறார்கள். விபசார விடுதிகள் மூடப்படுகின்றன. விபசார விடுதிகளாக செயல்படும் மசாஜ் கிளப்புகளும் சீல் வைக்கப்படுகிறது.

அதுபோல சென்னையில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் செயல்படும் சூதாட்ட கிளப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணியில் செயல்பட்ட 2 சூதாட்ட கிளப்புகளில் நேற்றுமுன்தினம் இரவு திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டனர். சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ரூ.6.34 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல ராயப்பேட்டையில் செயல்படும் சூதாட்ட கிளப் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தியாகராயநகரில் பாண்டி பஜார் பகுதியில் ஏற்கனவே மூடப்பட்டுள்ள பிரபல சூதாட்ட கிளப்பை மீண்டும் திறக்க வைப்பதற்கு, உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பிட்ட உதவி கமிஷனரின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கமிஷனருக்கு கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை ஒரு நம்பர் லாட்டரி தொழில் மீதும், கஞ்சா வியாபாரிகள் மீதும் எடுக்கப்பட வேண்டும் என்பது சென்னை நகர மக்களின் நீண்ட கோரிக்கையாக உள்ளது.

சென்னையில் கொடிகட்டி பறக்கும் பிரபல லாட்டரி மன்னன் மீது நடவடிக்கை எடுத்தாலே, ஒரு நம்பர் லாட்டரி ஒழிக்கப்பட்டு விடும்.

Similar News