செய்திகள்
பிரியாணி கடை உரிமையாளர் காரில் இருந்த ரூ.3 லட்சம் திருட்டு
பிரியாணி கடை உரிமையாளர் காரில் இருந்த ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் மாருதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(வயது 45). கிழக்கு தாம்பரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
தமிழ்ச்செல்வன் நேற்று காரில் கிழக்கு தாம்பரம்-வேளச்சேரி சாலையில் பூண்டி பஜாரில் உள்ள கடைக்கு வந்தார். காரில் இருந்து அவர் இறங்கிய உடன் டிரைவர், காரில் எதிரில் உள்ள டீக்கடைக்கு சென்றார்.
பின்னர் அந்த கடையில் டீ குடித்து விட்டு டிரைவர் திரும்பி வந்து பார்த்தபோது காரில் வைத்து இருந்த ரூ.3 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து சம்பவம் குறித்து தமிழ்ச்செல்வன் சேலையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.