செய்திகள்

பொத்தேரியில் எஸ்.ஆர்.எம். கல்லூரிக்குள் புகுந்து மாணவருக்கு சரமாரி வெட்டு - முன்னாள் மாணவர்கள் தாக்குதல்

Published On 2016-08-11 11:37 IST   |   Update On 2016-08-11 11:37:00 IST
பொத்தேரியில் முன்விரோதம் காரணமாக எஸ்.ஆர்.எம். கல்லூரிக்குள் புகுந்து மாணவரை சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு:

தாம்பரத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் கணேசன். இவர் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலருக்கும் முன் விரோதம் இருந்தது.

நேற்று மாலை 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று கல்லூரிக்குள் புகுந்தது. அவர்கள் கத்தி, ஆக்கி மட்டை போன்ற ஆயுதங்களை வைத்திருந்தனர். முகத்தை துணியால் மூடி இருந்தனர்.

அப்போது வகுப்பறையில் இருந்து கணேசன் வெளியே வந்தார். அவரை 10 பேர் கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டியது. ஆக்கி மட்டையாலும் தாக்கினார்கள். இதில் கணேசனுக்கு தலை, மார்பு ஆகிய பகுதிகளில் வெட்டு விழுந்தது. வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

கல்லூரிக்குள் புகுந்து மாணவர் தாக்கப்பட்டத்தை பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. உடனே 10 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

படுகாயம் அடைந்த கணேசனை மீட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு அவசர பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் விசாரணை நடத்தினார். மாணவர் கணேசனிடம் போலீசார் விசாரித்தபோது, கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் செல்வமணி, லட்சுமணன், பல்லாக்கு உள்பட 10 பேர் தாக்கியதாக கூறினார். 3 பேரை தவிர மற்றவர்கள் அடையாளம் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

Similar News