காஞ்சிபுரம் அருகே கோவிலில் கூழ்குடித்த 28 பெண்களுக்கு வாந்தி-மயக்கம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த பாலுச்செட்டிசத்திரம் தாமல் அருகே உள்ள தைப்பாக்கம் கிராமத்தில் பெரியபாளையத்தம்மன் கோயில் உள்ளது.
இங்கு ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ஒருவர் கிராம மக்களுக்கு கூழ் ஊற்றினார்.
இதில் கூழ் குடித்த ஏராளமானோருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
இன்று காலை உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட யமுனா, கவிதா, முனியம்மாள், கிருஷ்ணவேணி, சிவகாமி, ரேவதி, அம்மு உள்ளிட்ட 28 பேர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி அறிந்ததும் சுகாதாரத்துறையினர் உடனடியாக மருத்துவக் குழுவினரை கிராமத்திற்கு அனுப்பி சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து அரசு மருத்துவர்கள் கூறும்போது, கூழினால் ஏற்பட்ட ஒவ்வாமை மற்றும் புட் பாய்சன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்த பின்னர்தான் அது குறித்து தெரிய வரும் எனக் கூறினர்.
கூழ் குடித்து பாதிக்கப்பட்ட இன்னும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.