கோபி அருகே கார் கதவை திடீரென திறந்தபோது விபத்து: மோட்டார் சைக்கிளில் வந்த தந்தை-மகன் படுகாயம்
கோபி:
சத்தியமங்கலம் அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவரும் இவரது தந்தை ராமசாமி (75)யும் மோட்டார் சைக்கிளில் ஒரு வேலை விசயமாக சென்றனர்.
தந்தையை பின்னால் உட்கார வைத்துவிட்டு சக்திவேல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.
இவர்கள் கோபி-கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். போக்குவரத்து நகர் பிரிவு என்ற பகுதியில் சென்றபோது ரோட்டோரம் நின்ற ஒரு காரின் பின்புற கதவை காரில் இருந்த கோபி அடுத்த மூலகாரணம் பாளையத்தைச் சேர்ந்த மோகனசுந்தரி (45) என்பவர் திடீரென திறந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தந்தையும், மகனும் கார் கதவில் எதிர்பாராத விதமாக மோதி ரோட்டில் விழுந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த இருவரும் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.