மானாமதுரை அருகே பிரித்தியங்கிரா தேவி கோவிலில் புத்திர காமேஷ்டி யாகம்: குழந்தை இல்லாத தம்பதிகள் பங்கேற்றனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பஞ்சபூதேஸ்வரம் என்ற இடத்தில் உள்ள மகா பிரித்தியங்கிரா தேவி கோவிலில் உலக மக்கள் ஆனந்தமாய் வாழ வேண்டி சகஸ்ர சண்டீயாக பெருவிழா கடந்த 29–ந்தேதி தொடங்கியது.
மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கிய 3–ம் நாள் விழாவில் குழந்தை இல்லாத தம்பதிகள் மட்டும் கலந்து கொள்ளும் புத்திர காமேஷ்டி யாகம் நடந்தது. அதை தொடர்ந்து திருமண தடை நீங்க சுயம்வர பார்வதி ஹோமும், நோய்கள் இன்றி வாழ தன்வந்தரி ஹோமமும் நடந்தது.
இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு சகஸ்ர சண்டீ என அழைக்கப்படும் ஆயிரம் சண்டீ யாகம் தொடங்கியது. தஞ்சை குருஜீ கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரி, யாகத்தில் உயர்ரக பட்டாடை, பட்டு புடவைகள், தங்க, வெள்ளி ஆபரணங்கள், பூமாலைகள், 21 வகையான மூலிகை பொருட்கள் போட்டு யாக வேள்வியை நடத்தினார்.
2–ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஆடி அமாவாசை, பதினெட்டாம் பெருக்கு, குருபெயர்ச்சியை முன்னிட்டு ஹோமம், கணபதி ஹோமம், வித்யா கணபதி ஹோமம், பஞ்சமுக பிரித்தியங்கிரா ஹோமம் நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து அம்பாளுக்கு பாத சமர்ப்பணம், கடம்புறப்பாடு நடைபெறுகிறது.
இரவு 9 மணிக்கு அம்பாளின் திரு அவதார நாடகமும் நடைபெறுகிறது. சகஸ்ர சண்டீ யாக விழா ஏற்பாடுகளை மானாமதுரை பஞ்சமுக பிரித்தியங்கிரா வேத தர்ம ஷேத்ரா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர். சிறப்பு யாக விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெறுகிறது. மதுரை, சிவகங்கை, மானாமதுரை பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு உள்ளன.