காரைக்குடி அருகே போலீஸ் சோதனைக்குப் பயந்து தப்ப முயன்றவர் கிணற்றில் விழுந்து பலி
காரைக்குடி:
காரைக்குடி அருகே பெரியகோட்டையை சேர்ந்தவர் செல்லையா மகன் பாண்டி (வயது 30). இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். தற்போது 1 மாத விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
பாண்டியும், அவருடன் 4 நண்பர்களும் சேர்ந்து இரவு மோட்டார் சைக்கிளில் எலி வேட்டைக்கு சென்றனர். எலி வேட்டையை முடித்து விட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தீர்த்தலைக்காடு அருகே வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது இரவு நேர ரோந்து போலீசார், பாண்டியுடன் வந்தவர்கள் முன்னதாக சென்ற மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். போலீசார் அவர்களிடம் டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி.புத்தகம் ஆகியவற்றை வாங்கி பார்த்தனர்.
அதனை கண்ட பாண்டியும் அவருடன் வந்த மற்ற இரண்டு நண்பர்களும் மோட்டார் சைக்கிள்களை போலீசார் சோதனையிடும் பகுதிக்கு முன்பாகவே நிறுத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பி அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று பதுங்கினார்கள். இதை பார்த்து தோட்டத்தில் இருந்த நாய்கள் குரைத்ததால், தோட்டக் காரர்கள் மின் விளக்கை எரிய விட்டு சுற்றி பார்த்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டி, அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக தோட்டத்தில் இருந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதில் காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
காரைக்குடி போலீஸ் டி.எஸ்.பி. கார்த்திகேயன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.